ஒரு சிறிய மாற்றம் சந்ததிகளை பாதுகாக்கும்.
முஸ்லிம்கள் தங்களது அகத்தையும் புறத்தையும் பொருளையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் அருட்கொடையாக வழங்கியுள்ள ரமலான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இரவுத்தொழுகை தொடர் பயான்கள் ஸஹர் உணவு இஃப்தார் ஏற்பாடுகள் என்று முஹல்லாவாசிகளை பள்ளிவாசல்களுடன் நெருக்கமாக்கி ஆன்மிகப் படுத்துவதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளும் ஜமாஅத் நிர்வாகம் பாரம்பரியமான நோன்புக்கஞ்சி காய்ச்சுவதில் இன்றைய மக்களின் உடல் நிலையை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
இன்றைய மூமின்களின் வீடுகள் முழுவதும் மருந்து மாத்திரைகள் நிரம்பிக் கிடக்கின்றன. பெண்களிடம் தூக்க மாத்திரைகள் சர்வ சாதாரணமாக புழங்குகிறது. முஹல்லாக்களில் வளரும் பிள்ளைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் வளர்ச்சியின்மை பார்வை கோளாறு கல்வி ஆர்வமின்மை ஆண்மை பெண்மை குறைபாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் நாம் அனைவரும் அறிந்திருந்தும் கூட எதுவும் செய்ய இயலாத நிலையில் நிற்கிறோம்.
மனித இனத்திற்கு நோய்கள் ரீதியாக இது ஒரு பேரிடர் காலம்.இவை எல்லாவற்றுக்கும் நம்மால் தீர்வளிக்க முடியாது. ஆனால் ஜமாஅத் நிர்வாகம் மாற்றத்திற்கான விதையாக மாறி பெரும் மதீப்பீடுகளுடன் உயர்ந்து நிற்க முடியும்.
நோன்புக்கஞ்சிக்கு அரசு கொடுக்கும் பச்சரிசியுடன் கம்பு தினை வரகு குதிரைவாலி உள்ளிட்ட ஏதாவது ஒரு சிறுதானிய உடசலையும் சேர்த்துக் கொண்டால் நோன்புக்கஞ்சி ருசியான ஊட்டச்சத்து மிகுந்ததாக தரம் உயர்ந்துவிடும்.
வருகின்ற ரமலான் மாதத்தில் ஜமாஅத் நிர்வாகம் இந்த ஒரு சிறிய முயற்சியை எடுத்தால், இதனால் முஹல்லா மக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு தமிழகத்தின் மானாவாரி விவசாயிகளுக்கு தமிழக பொருளாதாரத்திற்கு என்று பலனடைவோர் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகும்.
மரியாதைக்குரிய ஜமாஅத் நிர்வாகம் ஆலிம்கள் புரவலர்கள் சமுதாய அமைப்புகளின் தோழர்கள் சமூக ஆர்வலர்கள்…..
உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக சந்ததிகளின் நலனுக்காக உங்கள் முஹல்லா பள்ளியில் இந்த ஆண்டு முதல் நோன்புக்கஞ்சிக்கு பச்சரிசியுடன் கொஞ்சம் சிறுதானியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில் இயங்கும் ஜமாஅத்கள் தங்கள் ஊரில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திட நிர்வாகத்துக்கு பொருளாதார உதவிகள் செய்திட வேண்டும்.
உம்மத்தின் அறிவு உள்ளம் உடல் வாழ்ச்சூழல் இவற்றை மேம்படுத்தாமல் நவீன கல்வி மேம்பாடு சாத்தியமில்லை என்பதால் மாற்றத்திற்கான ஒரு சிறிய கவன ஈர்ப்பாக சிறுதானிய நோன்புக்கஞ்சி குறித்து பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
-CMN SALEEM