பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.
பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.
கொண்டாட்ட வழிமுறைகள் ஊருக்கு ஊர் வேறுபட்டாலும் 90 களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வில் ஒன்றுகலந்திருந்த உயர்ந்த நாகரிகம் இது.
முதன்முதலில் எஸ்ஸர்னல் குர்ஆன் ஓத துவங்கும் அன்று பெண் பிள்ளைகளுக்கு புத்தாடை உடுத்தி நகைகள் அணிவித்து அலங்கரித்து பள்ளிக்கு அனுப்புவார்கள்.
அதிகாலை நேரத்தில் அரைதூக்கத்துடன் மக்தப் மதரஸாவிற்கு பல மாதங்கள் நடந்து ஆலிம்ஸா முன்பாக பக்தியுடனும் அச்சத்துடனும் அமர்ந்து முழு குர்ஆனையும் ஓதிமுடிக்கும் தங்களது பிள்ளைகளை கண்டு அடையும் ஆனந்தத்தை அளவிட்டுவிட முடியாது.
அன்றைய தினம் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாகி விட்டதாகவே உணருவார்கள்.ஒரு பெரும் மார்க்கக் கடமையை நிறைவேற்றிவிட்ட பெருமிதமும் மனநிறைவும் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.அதை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார்கள்.
பள்ளிவாசலே கதி என்று கிடந்து அல்குர்ஆனை அற ஒழுங்குடன் ஓதிக்கொடுத்த ஆலிம்ஸாவை வீட்டுக்கு அழைத்து புத்தம்புது வெள்ளை கைலி மார்ட்டின் சட்டையுடன் வசதிக்கேற்ப கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து கண்ணியப்படுத்திய கள்ளம் கபடமில்லாத உள்ளங்கள் வாழ்ந்த காலம் அது.
தங்கள் பிள்ளைகள் ஓதிமுடித்த மகிழ்ச்சியான செய்தியை ஊருக்கும் உறவுகளுக்கும் வெளிப்படுத்தும் விதமாக அவிக்காத நெல்லை அரவை மில்லுக்கு அனுப்பி உமி நீக்கி கொண்டவரப்பட்ட வெள்ளை வெளீரென்ற பச்சரிசியுடன் தேங்காய்ப்பால் நாட்டுவெல்லம் ஏலக்காய் கடலைப்பருப்பு முந்திரி சேர்த்த பாச்சோற்றில் பசுநெய் ஊத்தி ஊரே மனக்க அந்த தாய் தந்தையின் உள்ளமும் மனக்க மகிழ உறவுகளுக்கெல்லாம் பகிர்வார்கள்.
ஊரும் உறவுகளும் கூடி அந்த பிள்ளைக்காகவும் ஓதிக்கொடுத்த ஆலிம்ஸாவுக்காகவும் துஆ செய்வார்கள். இந்த அழகிய பண்பாடு இன்று அருகிப் போய்விட்டது. இன்றைய தலைமுறை இழந்துவிட்ட பல மகிழ்ச்சிகரமான பண்பாட்டு கொண்டாட்டங்களில் இதுவும் ஓன்று.
அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் பிள்ளைகளை கொண்டாடும் அந்த அழகிய மரபை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்.அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் இபாதத்துகளை வரம்புக்குட்பட்டு கொண்டாடி கொள்வதும் ஒரு பிரிவு இபாதத் தானே.
அதேபோல ஊர் பிள்ளைகள் அனைவருக்கும் குர்ஆன் ஓதிகொடுப்பதிலேயே வாழ்வை அர்ப்பணித்த மூத்த ஆலிம்களை கண்டால் அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களது குடும்பத்தை கண்ணியப்படுத்துவதும் உயர்ந்த பண்பாடு தானே.அதுவும் ஒரு பிரிவு இபாதத் தானே.
பலநூறு பிள்ளைகளின் நாவிலும் உள்ளத்திலும் அல்குர்ஆனை பதிவாக்கிய அந்த ஒரு இறைச்சேவைக்காக வழங்கப்படும் ஈடுஇணையற்ற நன்மைகள் மலைபோல உயர்ந்து நின்று அந்த ஆலிம்ஸாக்களுக்காக மண்ணறையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் சாட்சி கூறும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது.
ஊர் கூடிய உறவுகள் கூடிய கொண்டாட்டங்கள் இல்லாத மூ،ஃமின்களிடம் மனஇறுக்கமும் வெறுமையும் பிளவுகளும் அதிகரிக்கும்.
—————————-
எனது தம்பி மகள் குர்ஆன் ஓதி முடித்த கொண்டாட்டம். துஆ செய்யுங்கள்.
