Admin
November 19, 2020
ஆன்றோர் சான்றோர்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகும் முறையே இஸ்லாமிய முறை.
சமூக அரசியல் விவகாரங்களில் தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்களைப் பெற்ற சமூகங்களின் வளர்ச்சியில் எப்போதுமே தேக்கநிலை இருக்காது. அதன் இளைஞர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக சரியான இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவரை குடியரசு இந்தியாவின் முதல் 20 ஆண்டுகளுக்கு முஸ்லிம் சமூகம் பெற்றிருந்தது.
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை, உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், சித்தாந்த ரீதியாக நேரெதிர் நிலைப்பாடுடைய தலைவர்கள் அமைப்புகளுடன் கூட சுமூகமான அரசியல் உறவுகளை வளர்த்து வந்துள்ளதை இன்றைய இளைஞர்கள் ஆழ்ந்து வாசிக்க வேண்டும்.
அவர்களுக்கு ” கவ்மின் காவலர் ” என்ற அடைமொழி உண்டு. காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ஒரு குடும்பத்திற்கோ, முஸ்லிம்களின் ஒரு சிந்தனைப் பிரிவுக்கோ,ஒரு கட்சிக்கோ,ஒரு அமைப்பிற்கோ சொந்தமானவராக ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்திருந்தால் இந்த அடைமொழி அவர்களை விட்டு அப்போதே அந்நியப்பட்டு போயிருக்கும்.
காயிதே மில்லத் அவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் தலைவர் என்பதை தங்களது விசாலமான அணுகுமுறையால், அனைவரையும் அரவணைக்கும் உயர்ந்த பண்பாடுகளால், கடும் சொற்களை சுடும் சொற்களாக ஒருபோதும் பயன்படுத்திடாத உன்னத தலைவராக வாழ்ந்து வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள்.
அரசியலில் அவர்களின் கூர்மையான தொலைநோக்குப் பார்வைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பானது எதுவென்றால் இளமையான இந்திய குடியரசில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் சமூகங்கள் பிற ஆதிக்க சமூகங்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாற்று தேர்தல்முறைக்கு கோரிக்கை விடுத்தார்கள்.
அதாவது நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் “பெரும்பான்மை ஓட்டுகள் ” என்ற இந்த தேர்தல் முறைக்கு மாற்றாக ” விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்” (Proportional Representation) என்ற தேர்தல் முறையை காயிதே மில்லத் அவர்கள் முன்வைத்தார்கள்.
நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் உலக வரலாற்றாசிரியர் நேருவைப் பார்த்து ” நீங்கள் 1952 தேர்தலில் 45 % ஓட்டுகள் வாங்கினீர்கள்.1957 தேர்தலில் 47.47 % ஓட்டுகளை வாங்கினீர்கள்.1962 தேர்தலில் 44.72% ஓட்டுகளை மட்டுமே வாங்கினீர்கள். இப்படி ஐம்பது விழுக்காடு ஓட்டுகளை கூட வாங்காமல் ஆனால் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சியமைத்து வருகிறீர்கள்.இது ஜனநாயகத்தின் மாண்புகளை குலைத்துவிடும். பெரும்பான்மை தேர்தல்முறை என்ற இன்றைய இந்த தேர்தல்முறை இந்திய போன்ற பன்முகச் சமூகங்கள் வாழும் நாட்டிற்குப் பொருந்தாதது” என்று ஆணித்தரமாக கூறினார்கள்.
தேர்தலில் அவரவர் பெற்ற ஓட்டுகளின் விகிதாச்சாரத்திற்கேற்ப அனைத்து சமூகங்களும் அதிகாரங்களைப் பகிர்ந்து ஆட்சி அமைக்கும் முறையை அடைவது தான் முஸ்லிம்கள் போன்ற கலாச்சாரத் தனித்துவமிக்க சமூகங்களுக்கு பாதுகாப்பானது என்பதை வலியுறுத்தி தொடர்ந்து வாழ்வு முழுவதும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்கள்.
காயிதே மில்லாத் அவர்களின் இந்த உரிமைக் குரலுக்கு ஆதரவாக 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி.மு.க பொதுக்குழுவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே இந்திய நாட்டிற்கு பொருத்தமான தேர்தல்முறை என்று தீர்மானம் நிறைவேற்றியது.
1972. இல் கண்ணியத் தலைவர் காலமானார்கள். கடந்த அரை நூற்றாண்டு காலமாக விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற தீர்மானத்தை மட்டும் அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் மாநாடுகளிலும் ஒரு சடங்குக்காக நிறைவேற்றி வருகிறோம். முன்னெடுத்து களம்காண யாரும் தயாரில்லை.
கண்ணியத் தலைவரின் காலத்திற்குப் பிறகு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை குறித்து முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தவருக்கும் தொடர்ந்து பயிற்றுவித்து வந்திருந்தால் இன்று ஏறக்குறைய வெற்றிபெறும் நிலையை அடைந்திருக்கலாம்.
இன்றைய தேர்தல்முறையில் சிறுபான்மை சமூகங்கள் ஒருபோதும் அரசியல் அதிகாரத்தை அடைய இயலாது என்பதை மட்டும் கண்ணியத் தலைவரின் நினைவூட்டலாக இங்கு முன்வைக்க விரும்புகிறேன். அவர்கள் வலியுறுத்திய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்ற மகத்தான அரசியல் இலக்கை நோக்கி மக்களை இனியாவது நகர்த்துவோம்