Admin
November 18, 2020
இன்றைய அவல நிலைக்கு எது காரணம்…..?
புதிது புதிதாக உருவாகிவரும் தொற்று நோய்கள் உள்ளிட்ட மக்களை வாட்டி வதைக்கும் வகை வகையான அத்துணை நோய்களையும் பட்டியலிட்டு கொள்ளுங்கள் அதோடு ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், உடலில் இரத்தம் இல்லாத இளம் பெண்கள், இவைதான் இன்றைய தமிழக மக்களின் அடையாளங்கள்.
இவை அத்துணைவற்றுக்கும் மூல காரணம் நமது பாரம்பரிய வேளாண்மை சீரழிக்கப்பட்டது. உணவு உற்பத்தி வணிகமய மாக்கப்பட்டது. நீராதாரங்களை திட்டமிட்டு நாசம் செய்தது. ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக திணித்தது. இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் அளவில்லாமல் பயன்படுத்தியது.
இதைத்தான் அய்யா நம்மாழ்வார் அவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்கள்.
நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து போய் கொடும் தொற்று நோய்க்கு அஞ்சி இன்று வீடுகளில் முடங்கி கிடக்கின்றோம். நோய்களோடு போராடுவதே நமது வாழ்க்கையாகி விட்டது.
இக்கட்டான இந்த நேரத்திலாவது இது குறித்து ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டுளோம்.
உலகமே இதுகுறித்து இப்போது அதிகம் கவலைப்பட துவங்கிவிட்டது.
வீடுகளில் ஓடிஆடி வளர்ந்து வரும் உங்களது பிள்ளைகளின் முகங்களைப் பாருங்கள் அவர்களையும் அவர்கள் மூலம் உருவாகப்போகும் உங்களது சந்ததிகளையும் நோய்களால் சீரழியும் சமூகமாக உருவாக்கப் போகிறீர்களா என்பதை ஆழமாக சிந்தியுங்கள்.
நம்மால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது தான். ஆனால் இதைப் பற்றிய அக்கறையும் மாற்றத்திற்கான முன்னெடுப்பும் இல்லாமல் இருந்தால் நாளைய தலைமுறை நம்மை மன்னிக்காது.
புரையோடிப்போயுள்ள இந்த சிக்கலுக்கு என்னால் ஆன எதையாவது ஒன்றை செய்துவிட்டு மரணிப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.