Admin
November 18, 2020
இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே எதிர்நீச்சல் போட முடியும்
செல்வம் பெருக்குதலில் (Wealth Development) மிக உறுதியான முன்னெடுப்புகள் (Aggressive Policy) முஸ்லிம்களின் இயல்பாக மாற வேண்டும்.
குடும்பத்தை நடத்த ஹலாலான வருமானம் தரும் தொழில் அமைந்து விட்டால் தான்உண்டு தனது தொழில்உண்டு என்று இருந்து விடுவது,வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மறுமை வாழ்விற்கு தயாராகுதல் என்ற இந்த தற்காப்பு அணுகுமுறை (Defensive Approach) அதிகமானவர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.
புதிது புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்கள், அவை மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள்,பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வரிவிதிப்புகள், வர்த்தக சட்டங்கள் போன்ற சமூக சட்ட நெருக்கடிகள் இந்த தற்காப்பு சிந்தனையை எளிதாக வீழ்த்தி விடுகிறது.
நமது கண்ணுக்கு முன்பாக பல அற்புதமான தொழில்கள் பின்னடைவை சந்தித்ததற்கு இந்த தற்காப்பு அணுகுமுறை ஒரு காரணமாக இருக்கிறது.
தென்னிந்திய,இலங்கை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகள் கோலோச்சியிருந்த சர்வதேச கடல் வணிகம் ஐந்தாயிரம் மைல் தொலைவிலிருந்து வந்த ஐரோப்பிய படையெடுப்பாளர்களிடம் அடங்கி ஒடுங்கி போனதும் இதனால் தான்.
பெரும் முயற்சிகள் மேற்கொள்ளாமல் வாழ்வியல் நெருக்கடிகளை சந்திக்காமல் வாழ்க்கையை எளிதாக இலகுவாக ஓட்டிவிடலாம் என்ற இந்த கருத்து முஸ்லிம்களுக்கு ஏற்புடையது அல்ல.
இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ச்சியாக உண்டாக்கப்படும் சமூக அரசியல் நெருக்கடிகள் காரணமாக நமது தொழில் மற்றும் வேலைகளில் செலுத்த வேண்டிய நேரத்தையும் பொருளையும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கே செலவிட வேண்டிய அவல நிலையில் உள்ளோம் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வணிகத்தில் கூர்மையான திட்டங்களோடு பெரும் முயற்சிகளை மேற்கொள்ளும் சமூகமாக நாம் உருவெடுக்க வேண்டும்.
உலகளாவிய வணிக வளர்ச்சியை உள்வாங்கி ஷரீஅத்தின் எல்லைக்குட்பட்டு புத்தம் புதிய வணிக சிந்தனைகளை காது கொடுத்து கேட்கும் வழக்கம் முஸ்லிம்களின் இயல்பாக மாற வேண்டும். இளம் சிந்தனைகள் தான் கால மாற்றத்திலும் நம்மை காலூன்றி நிற்க செய்யும்.
இன்றைய இளைஞர்களிடம் பிரபலம் அடைந்துள்ள TEDx TALKS போல புதிய சிந்தனைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு அறிவுத்தளம் முக்கியமான மஹல்லாக்களில் அமைக்கப்பட வேண்டும்.
இது குறித்து இன்னும் பேசுவோம்…..
– CMN SALEEM