சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான – ஒருநாள் பயிலரங்கம்
1990 களில் முஸ்லிம் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே சட்டம் பயின்றனர். அவர்களும் கூட வழக்கறிஞர் தொழிலை ஒரு மதிப்புமிக்க அடையாளமாக மட்டுமே கருதி சட்டம் பயின்றனர்.
2000க்குப் பிறகு சட்டம் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் எதிர்கொள்ளும் சமூக அரசியல் அழுத்தங்கள் காரணமாக சட்டம் படிக்கின்றனர். இவர்களிடம் சட்ட நுட்பங்களும் சமூக அக்கறையும் அர்ப்பணிப்பு சிந்தனையும் மிகைத்திருக்கிறது.
இந்த மாணவர்கள் தங்களுக்கென மிகச்சரியான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு பயணித்தால் உம்மத்தின் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக உயர்ந்து நிற்பார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் ஒருநாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முஹம்மது ஜியாவுதீன் அவர்களும்,அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (SOEL) சர்வதேச சட்டத்துறை பேராசிரியர் முனைவர் முஜாஹிதுல் இஸ்லாம் அவர்களும் மனித உரிமை வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சட்டம் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொறுப்புகள் என்ன என்பதையும், வழக்கறிஞர் தொழிலைக் காட்டிலும் அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் ஒருசேர குவித்திடும் உலகளாவிய வாய்ப்புகள் குறித்தும் நான் வகுப்பெடுத்தேன்.
உம்மதிற்கு எதிரான சமூக அரசியல் நெருக்கடிகளை எதிர்மறையாக பரப்பி சமூகத்தை பதற்றமடைய வைப்பதை விட அந்த நெருக்கடிகளை அறிவோடும் திறனோடும் எதிர்கொள்ளும் ஆற்றலை இளம் தலைமுறையிடம் வளர்த்தெடுப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும்.