Admin
November 18, 2020
தயவு கூர்ந்து பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்களை நடத்தாதீர்.
பெற்றோர்களே….
# உங்களது குழந்தை பருவத்தின் இனிமையான நிகழ்வுகளை பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல சொல்லிக்கொடுங்கள்.
நாமும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை அது தூண்டிவிடும்.
# உங்களது தாய் தந்தையரின் உயர்வான குணங்களை உங்களை வளர்த்தெடுக்க படிக்கவைக்க திருமணம் செய்துகொடுக்க அவர்கள் பட்ட துன்பங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லிக் கொடுங்கள்.
குடும்பத்தின் மூத்தவர்கள் மீது இனம்புரியாத ஈர்ப்பும் மரியாதையும் உண்டாகும்.
# உங்களைச் சுற்றி நடக்கும் சமூக அரசியல் நடப்புகளை கூட்டல் குறைத்தல் இல்லாமல் சொல்லிக்கொடுங்கள்.
நாளை சமூக களத்தில் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை சந்திப்பதற்கு அவர்களை தயார்படுத்தும்.
# மோசமான தோல்விகள் எதார்த்தம் என்றும் அவற்றை சந்தித்து தான் ஆக வேண்டும் என்றும் கற்றுக்கொடுங்கள்.
உங்கள் பிள்ளைகளை வெற்றியாளர்களாக நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.
# பசி வறுமை ஏழ்மை இவற்றை அனுபவங்களோடு கண்ணீர் மல்க கற்றுக்கொடுங்கள்.
அதில்தான் பிள்ளைகள் மனிதத்தன்மை பெறுவதற்கான அபூர்வ சூட்சுமம் அடங்கியுள்ளன.
# தர்மம் செய் என்று சொல்லாதீர். மாறாக கைபிடித்து உங்களோடு செய்ய வையுங்கள்.
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து வரும் உண்மை என்பதை மறவாதீர்.
உலகின் எந்த கல்விமுறையிலும் எந்த பாடப்புத்தகங்களிலும் இதை பார்க்க முடியாது. ஆனால் இது தான் உங்கள் பிள்ளைகளுக்கு இப்போதும் எப்போதும் தேவையான பாடமும் பயிற்சியும் படிப்பினைகளும் என்பதை மனதார நம்புங்கள்.
பொன்போல வாய்த்த இந்த ஓய்வு காலத்திலாவது பாடப்புத்தகங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.