நோன்பு கஞ்சியை நோய்எதிர்ப்பு கஞ்சியாகவும் பயன்படுத்தலாமே
ரமலான் மாதம் துவங்க உள்ளதால் மஹல்லாக்களில் நோன்பு காஞ்சிக்கு தேவையான ஏற்பாடுகள் துவங்கி இருக்கும்.
இதுநாள்வரை பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க தீட்டப்பட்ட வெள்ளை பச்சரிசியை தான் பயன்படுத்தி வருகிறோம்.அரசின் சார்பாகவும் பச்சரிசி வழங்கப்படுகிறது.
இந்த பச்சரிசி கஞ்சியை நோய்எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் சிறுதானிய கஞ்சியாக தரம் உயர்த்துவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
இன்றும் பல குடும்பங்களில் வரகரிசி குதிரைவாலி போன்ற தானியங்களில் நோன்பு காஞ்சி காய்ச்சுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆனால் ஊர்மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சுவது நடைபெற்றதாக தகவல் இல்லை.
சிறுதானியங்களின் விலை சற்று கூடுதல் என்பது உண்மை. ஆனால் உம்மத்தின் – ஊர்மக்களின் உடல்நலன் விலைமதிப்பில்லாதது.
ஒருமாத காலமும் சிறுதானிய காஞ்சி உட்கொள்வதால் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் ஆகியோரின் உடல்நலனில் அபரிமிதமான ஆற்றல் உண்டாகும் என்பதை மறுக்க இயலாது
கட்டுபடியாகாது என்று நினைக்கும் ஜமாத்தார்கள் பச்சரிசியுடன் பகுதிஅளவிற்கு தானியங்களையும் சேர்த்து கொள்ளலாம்.
தேசிய சிறுதானிய உற்பத்தித் திட்டத்தின் கீழ் வறண்ட நிலமான ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் குதிரைவாலி,கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய தானியங்கள் சென்ற ஆண்டு பயிரிடப்பட்டன். குறைவான விலையில் தேவைப்படும் அளவில் அந்தந்த மாவட்டத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளிவாசல்களில் – மஹல்லாக்களில் சிறுதானிய பயன்பாடு அதிகரிக்கத் துவங்கினால் தமிழக வேளாண்மையில் மிகப்பெரும் மாற்றம் நிகழும். வறண்டு கிடக்கும் தமிழக விவசாயிகளின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும்.
மட்டுமல்ல பொருளாதார மந்தநிலை காரணமாக அரபுநாடுகளிலிருந்து வாடிவதங்கிப் போய் ஊர்திரும்பும் மக்களுக்கு தமிழகத்தின் வறண்ட நிலங்கள் வாழ்வளிக்கும்.
ஒரு ஜமாத்தில் இந்த சிறுதானிய கஞ்சியை காய்ச்சி அதை வலைத்தளங்களில் வெளியிட்டால் மற்ற ஜமாத்தார்களும் பின்பற்றுவதற்கு வசதியாக இருக்கும்.