Admin
November 17, 2020
முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் – 4
முஸ்லிம்களின் கல்வித் திட்டத்திற்கு
முஸ்லிம் சமூகம் தான் பொறுப்பு.
———————————————————–
உலகை வழிநடத்தும் பொறுப்பை சுமக்கும் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் சவால்களை எதிர்கொண்டு மீண்டும் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் திறமையான இளம் தலைமுறையை உருவாக்குவது தான் இன்றைய கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் புரவலர்கள் களப்பணியாளர்கள் ஆகிய அனைவரின் முதன்மையான பணி.
அப்படிப்பட்ட உலகத்தரமான சமூகத்தை உருவாக்கும் திட்டத்திற்கு ஆதாரமாகவும் அடித்தளமாகவும் இருப்பது இளம் தம்பதிகளுக்கான இந்த பேறுகால பாடம்(Pregnancy Syllabus). இஸ்லாமிய கல்விக் கொள்கை அடிப்படையில் வகுக்கப்படும் கல்விக்கான காலப் பிரிவுகளில் முதல் பகுதியான பேறுகால பாடம் முழுவதும் தாய்மை அடைந்த பெண்ணுக்கும் அவளது கணவனுக்குமானது.
தமிழில் அது ஒரு முழுமையான பாடத்திட்டமாக வடிவம் பெறாத இன்றைய நிலையில் யாராவது வடிவமைத்து தரட்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள், பெண்கள் மதரஸாக்கள் தங்களது பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு வகுப்புகளாக இந்த பேறுகால பாடத்தை நடத்த முன்வர வேண்டும்.பள்ளிக்கூடங்கள் அமைந்திருக்கும் மஹல்லாவை சூழ வாழும் பெற்றோர்களுக்கு இந்த பேறுகால பாடம் வாழ்க்கை குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பேறுகால பாடத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு ஆன்மிகம் (Spiritual). இரண்டாவது பிரிவு உயிரியல் (Biological).மூன்றாவது பாரம்பரியம் (Traditional) பிரிவு. இந்த மூன்றையும் சமஅளவிற்கு இணைத்து அதை மூன்று காலஅளவு கொண்டதாக பிரித்து இளம் பெற்றோர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
ஒரு ஆங்கில மொழித்திறனுடைய ஆலிம் அல்லது ஆலிமா.
ஒரு அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்.
ஒரு உணவு & ஊட்டச்சத்துத் துறை பெண் நிபுணர்.
ஒரு பெண் மருத்துவர் (AYUSH).
இவர்கள் கூடி அமர்ந்து கலந்துரையாடினால் ஒரே வாரத்தில் ” இஸ்லாமிய பேறுகால பாடத்திட்டம் ” (Islamic Pregnancy Syllabus) தயாராகிவிடும்.
இந்தப் பாடத்தின் பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக உயிரோட்டமாக நடத்தப்படுமானால் அடுத்த ஐந்தாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு வரும் பிள்ளைகளின் திறனில் அபரிமிதமான நுண்ணறிவை (Intelligent) காணலாம்.எதிர்கால தலைமுறை நோய்எதிர்ப்புத் திறன் கொண்ட தன்னம்பிக்கை மிகுந்த தலைமுறையாக உருவாகிவரும் என்பது நிச்சயம்.
நாட்டு மக்கள் எல்லோருக்குமான பொதுக்கல்வியை தரமாகவும் இலவசமாகவும் வழங்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்ற கருத்தில் மாற்றமில்லை.இந்தியாவில் இனிமேல் அந்த நிலை உருவாக வாய்ப்புகள் மிக குறைவு.ஆனாலும் எதிர்பார்ப்போம்.
ஆனால் முஸ்லிம்கள் பொதுக்கல்வியை முழுவதுமாக ஏற்பவர்கள் அல்ல.பொதுக் கல்வியில் தங்களது வளர்ச்சிக்கும் பயன்பாட்டிற்கும் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள். அதனால் முஸ்லிம்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி முறையை முஸ்லிம்கள் தவிர்த்து வேறு யாராலும் வடிவமைத்து விட முடியாது.
முஸ்லிம் ஆட்சிலும் சரி பின்னர் பிரிட்டிஷார் ஆட்சியிலும் சரி முஸ்லிம் சமூகத்திற்கு ஆரம்பக் கல்வி வழங்கும் அமைப்பின் முழு பொறுப்பையும் ஜமாஅத் நிர்வாகமே ஏற்றிருந்தது.சமுதாய புரவலர்கள் அள்ளிக்கொடுத்த வக்ஃப் சொத்துக்களின் பட்டியலும் பல உலமாக்கள் தமிழகம் முழுவதும் கால்நடையாக நடந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான மக்தப் மதரஸாக்களும் இதற்கு சாட்சி சொல்லுகின்றன.
சொந்த வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அறியாமல் உருவாகும் சமூகம் தன் தலைக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் என்பதற்கு சான்றாக அரும்பாடுபட்டு தமிழகத்தில் உருவாக்கப்பட்ட மக்தப் மதரஸாக்களின் அருமை பெருமை தெரியாமல் அலட்சியத்தால் கைவிட்டு வரும் நிலையில்….
கேரள முஸ்லிம்கள் எப்படி அதை நவீன காலத்திற்கேற்ப சிறப்பாக கையாளுகின்றனர் என்பதற்கு அடையாளமாக திகழும் SAMASTHA KERALA SUNNI VIDYABHYASA BOARD குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்து பார்ப்போம்.
தொடரும்……
——————————————————
நான்காவது பாடத்தில் நாம் கற்றுக்கொள்வது :
——————————————————
1.இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் பேறுகால பாடத்தை நடத்த முயற்சிக்க வேண்டும்.
2.முஸ்லிம்களின் கல்வித் திட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் தான் பொறுப்பு.