Admin
November 17, 2020
முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் – 2
புதிய கல்வி கொள்கை (NEP 2020) நடைமுறைப் படுத்தப்படும் நிலையில் முஸ்லிம்கள் தங்களது பாரம்பரிய கல்வி முறையை நிலைநிறுத்திக் கொண்டு அதனூடாக சமூகத்தை அனைத்து நிலைகளிலும் அதிகாரப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளைத் தான் இந்தத் தொடரில் ஆராய உள்ளோம்.
புதிய கல்வி கொள்கையின் பகுதி – 1 இல் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE – Early Childhood Care and Education) பிள்ளைகளின் கல்வி காலம் 3 வயதிலிருந்து துவங்குகிறது என்று வகைப்படுத்தி யுள்ளனர்.1986 இல் ராஜிவ் காந்தி காலத்தில் வெளியிடப்பட்ட முந்தைய கல்வி கொள்கையில் இது 6 வயதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பிஞ்சு பருவத்திலேயே தாயிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பது,கல்வியின் முதன்மை இலக்கு பொருளீட்டுவது என்ற முதலாளித்துவ கொள்கையின் கீழை நாடுகளுக்கான கல்வித் திட்டம் தான் 3 வயதில் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற திட்டம்.இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பள்ளி சேர்க்கைக்கான வயதை 6 ஆகத்தான் வைத்துள்ளார்கள். அதை சரியானதாகவும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதாகவும் கருதுகின்றனர்.
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி ((ECCE) குறித்த புதிய கல்வி கொள்கையின் பார்வை எப்படி இருக்கிறது இதில் முஸ்லிம்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் வேறுபடுத்தி வரையறை செய்து கொண்டால் ஆரம்பக்கல்வியை முஸ்லிம் சமூகம் எப்படி அணுகவேண்டும் என்பது தெளிவாகி விடும்.
அதற்கு அடிப்படையாக ” இஸ்லாமிய கல்விக் கொள்கை” குறித்த ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்.உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திய முந்தைய காலத்திலும் சரி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வீறுகொண்டு எழும் இன்றைய காலத்திலும் சரி நவீன காலங்களுக்கேற்ற ஒரு இஸ்லாமிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கான சோதனை முயற்சி கூட இதுவரை சமூகத்தில் துவங்கப்படவில்லை.
இது குறித்து சென்ற நூற்றாண்டில் முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய சிந்தனைகளுக்கு புத்துயிர் ஊட்டிய புரட்சியாளர் மௌலானா மவுதூதி அவர்கள் ஆற்றிய உரைகளையும் வெளிப்படுத்திய கவலைகளையும் வசதியாக மறந்து போனோம்.
(The Education – by Moulana Moududi)
அறிவுத் துறையின் வளத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகள் உலகையும் அறநூறு ஆண்டுகள் இந்திய துணைக் கண்டத்தையும் ஆட்சி செய்த முஸ்லிம் சமூகத்தின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு அறிவுத்துறையை உயிரோட்டமாக பாதுகாக்காத அலட்சிய வாழ்வும் அடிப்படையான காரணங்களில் ஒன்று.
இஸ்லாமிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும் என்பதை எனது சிறிய அறிவைக் கொண்டு ஒரு குறிப்பை இங்கே வழங்கிட முயற்சிக்கின்றேன்.இது குறித்து கூடுதல் ஞானமுடைய உலமாக்கள் கல்வியாளர்கள் குறிப்பாக பெண் கல்வியாளர்கள் இதில் சேர்க்க வேண்டியதையும் நீக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டினால் அதனடிப்படையில் ஒரு வரைவு அறிக்கையை இன்ஷா அல்லாஹ் தயாரித்து விடலாம்.
ஆரம்பகால பிள்ளைகளுக்கான கல்வி என்பது பெண் கருவுறும் காலத்திலேயே துவங்கிவிடுகிறது என்பது தான் அறிவியல் மார்க்கமான இஸ்லாத்தின் கல்வி கொள்கை.
தொடரும்……
————————————————————–
இரண்டாம் பாடத்தில் நாம் கற்று கொள்வது :
1.) இஸ்லாமிய கல்வி கொள்கை வகுக்கும் முயற்சிகள் துவங்கப்பட வேண்டும்.
2.) ஆரம்பகால கல்வி என்பது தாய் கருவுறும் காலத்திலேயே துவங்குகிறது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.