Admin
November 17, 2020
முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் -1
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்வி கொள்கை (NEP 2020) குறித்த வாதப் பிரதிவாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே மறைமுகமாக பல வடிவங்களிலும் அதை நடைமுறைப்படுத்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.கல்வியை காவி மயமாக்கும் வேலையை இவர்கள் முதன் முதலாக ஆட்சிக்கு வந்து உடனேயே துவங்கிவிட்டார்கள். இன்றைய NCERT பாடத்திட்டங்களில் இதை வெளிப்படையாக காணலாம். 2023 கல்வியாண்டு முதல் முழுமையாக நடைமுறைக்கும் வரும் என்று அறிவித்துள்ளனர்.
புதிய கல்வி கொள்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு இருப்பது போன்ற தடைகளும் சூழ்ச்சிகளும் மதச் சிறுபான்மையில் பெரும்பான்மை எண்ணிக்கையுடைய முஸ்லிம் சமூகத்திற்கும் இருக்கின்றன என்ற கருத்தை மீண்டும் இங்கே பதிவு செய்து அதற்கான தீர்வுகளை அலசுவோம்.
” முஸ்லிம் சமூகத்திற்கும் தடைகள் உள்ளன ” என்று பிரித்து அடையாளப்படுத்துவதற்கு காரணம் முஸ்லிம்களின் கல்விச்சிக்கலும் அதற்கான தீர்வுகளும் மற்ற சமூகங்களின் கல்விச்சிக்கலும் அதற்கான தீர்வுகளும் ஒன்றல்ல என்பதை நம் மனதின் அடித்தளத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
பசி பஞ்சம் ஊழல் வறுமை ஏழ்மை சமூகப் பாதுகாப்பின்மை போன்ற நெருக்கடிகள் சீரழிவுகள் முஸ்லிம்கள் உள்ளிட்ட இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இறையியல் கலாச்சாரம் குடும்பவியல் போன்ற பல சிறப்பு இயல்புகள் உள்ளடங்கிய முஸ்லிம்களின் தனிச்சட்டங்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பதை நாம் அறிந்துள்ளோம்.
முஸ்லிம்களின் இம்மை மறுமை வாழ்விற்கு அடித்தளமிடும் இஸ்லாமிய இறையியலை, தனிச்சட்டங்களை, தலைமுறை தலைமுறைக்கும் கடத்தும் மூலவேரான முஸ்லிம்களின் கல்வி முறை மற்ற சித்தாந்த வாதிகளிடமிருந்து கொள்கை அளவிலும் கற்பிக்கும் முறைகளிலும் அடைய வேண்டிய இலக்கிலும் அடிப்படையிலேயே பல வேறுபாடுகள் உள்ளன என்ற புரிதல் நம்மிடம் ஆழமாக பதிய வேண்டும்.
உலகம் அழிகின்ற காலம் வரை அனைத்திலும் நிறைவான செறிவான நீதியான சட்டங்களை வழிமுறைகளை கற்றுத்தரும் குணம் தான் இஸ்லாமிய கல்வியின் தனிச்சிறப்பு.
அடிப்படையான இந்த கருத்தியல் பின்புலத்தில் இந்திய முஸ்லிம்களின் கல்வி சிக்கலை புரிந்து கொள்வதற்கு அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு முன்பு இஸ்லாமிய கல்வி கொள்கையையும் இந்திய முஸ்லிம்களின் கல்வி வரலாற்றையும் மிக ஆழமாக புரிந்து கொள்வது அறிவுடைய சமூகத்திற்கு சிறப்பு சேர்க்கும்.
இந்த முதல் பாடத்தில் நாம் கற்றுக்கொள்வது :
——————————————————————————–
1.) முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சிக்கலும் மற்ற சமூகத்தவரின் கல்விச்சிக்கலும் ஒன்றல்ல.
2.) முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சிக்கலுக்கான தீர்வை முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து முன்வைக்க வேண்டும்