Admin
November 17, 2020
முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் -3
இஸ்லாமிய கல்விக் கொள்கை
———————————————-
இஸ்லாமிய கல்விக் கொள்கை என்பது படித்தவர்கள், பட்டதாரிகள், பலதுறை அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் போன்ற பிரிவினரை மட்டுமே உருவாக்கும் குறுகிய கால இலக்கு கொண்டது அல்ல.
இந்த உலகில் வளர்ந்த நாடுகள் எவரிடமும் இல்லாத எந்த ஜனநாயக அரசும் பின்பற்றாத எந்த சமூகத்தவரும் முன்வைக்காத மிக உயர்வான இலக்கும் மிக ஆழமான எதிர்பார்ப்புகளும் இஸ்லாமிய கல்விக் கொள்கைக்கு இருக்கிறது.
அது மனித சமூகத்தை மிக நேர்த்தியாக கட்டமைக்கும் பாடத்திட்டங்களையும் பயிற்சி முறைகளையும் கொண்டது.மனிதர்கள் பலரின் அறிவு எல்லைக்குள் அடங்காத மண்ணுலகம் விண்ணுலகம் என்ற நிரந்தர உலகத்திலும் நீதி செலுத்தும் இயல்பை கொண்டது.இஸ்லாமிய கல்விக் கொள்கை வழங்கும் பயிற்சியின் ஆழத்தையும் அகலத்தையும் அளவிட்டுவிட முடியாதது.
அப்படிப்பட்ட இஸ்லாமிய கல்விக் கொள்கையை இந்தியவில் நிலவும் கல்வி முறைகளோடு நுட்பமாக பொருத்தி முஸ்லிம் சமூகத்தை அதன் பாரம்பரிய முறையில் வலிமையாக கட்டமைப்பது தான் அறிவார்ந்த சமுதாய ஊழியர்களின் வேலை.
எப்படிப் பொருத்துவது ? இஸ்லாமிய கல்விக் கொள்கை என்ன ?
இஸ்லாமிய கல்விக் கொள்கையின் மூலாதாரங்கள் (Source of Knowledge) மூன்று.1)அல்குர்ஆன் 2)ஹதீஸ் 3)மானுட இனத்தின் பயனுள்ள அறிவு.
இந்த மூன்றையும் மூலாதாரங்களாக கொண்டு இன்றைய நவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)காலத்திற்கேற்ற ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டியது முஸ்லிம் சமூக கல்வியாளர்களின் முதன்மையான பொறுப்பு.
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) 3 வயதில் துவங்குகிறது என்று NEP 2020 இல் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமிய கல்விக்கொள்கையில் பிள்ளைகளுக்கான கல்வி காலம் தாயின் கருவறையிலேயே துவங்கிவிடுகிறது. இல்லற வாழ்வில் ஈடுபடும் ஆண் வெளிப்படுத்தும் உயிரணுவில் அவனது மூதாதையரின் அறிவு பண்பாடு அடையாளங்கள் என அனைத்தும் பதிவாகியிருக்கக் கூடிய DNA என்ற தாயனை, பெண்ணின் கருமுட்டையில் உள்ள தாயனையோடு (DNA) இணைந்து ஒரு புதிய தாயனை (DNA) உருவாகிறது. சில நாட்களுக்குப் பிறகு அந்த புதிய தாயனையில் செய்திகள் பதிவாகத் துவங்கி விடுகின்றன.
வயிற்றில் வளரும் தங்களது வாரிசுக்காக அடுத்த 10 மாதங்களும் தம்பதிகள் பெற வேண்டிய பயிற்சி, பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைதான் இஸ்லாமிய கல்விக் கொள்கையின் முதல் பகுதியான “பேறுகால பாடம்” (Pregnancy Syllabus).தாயின் அறிவு, ஆன்மா, உடல்,உணவுமுறை, வாழ்க்கைமுறை, தம்பதிகளின் ஸ்பரிசம், உரையாடல்கள்,வாழும் சூழல்,வாசிக்க வேண்டிய நூல்கள், உள்ளிட்ட அனைத்தையும் பேறுகால பாடம் வரையறை செய்கிறது.
இந்த பேறுகால பாடத்தை தம்பதிகள் முறையாக பின்பற்றுகின்ற போது கருவில் வளரும் பிள்ளைக்கு அறிவு வளர்ச்சியின் துவக்கப் புள்ளியாக அது அமைகிறது.இந்த பேறுகால பாடம் குறித்த புத்தகங்கள் பல இஸ்லாமிய நாடுகளிலும் Blessed Pregnancy என்ற தலைப்பில் வெளிவந்து மக்களிடையே புழக்கத்தில் உள்ளன.அதை கால வரையறை கொண்ட பாடத்திட்டமாக வடிவமைத்து இஸ்லாமிய துறை சார்பாக புதுமணத் தம்பதிகளுக்கு பயிற்றுவிக்கின்றனர்.சிறந்த சந்ததிகள் உருவாவதற்கு இந்த பயிற்சித்திட்டம் அடித்தளமாக அமைகிறது என்று கூறுகின்றனர்.
உலகை எப்போதும் தங்களது ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் ஆர்வமுடைய யூதர்களும் கிருத்துவர்களும் அவர்களின் ஆர்வத்திற்கு அடித்தளமாக தங்களது சந்ததிகளை உயிரியல் ரீதியாக மிக வீரியமாக உருவாக்குவதில் அந்தந்த மதகுருமார்கள் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டு இந்த Pregnancy Syllabus நூல்களையும் பாடத் திட்டங்களையும் எழுதி வெளியிடுவதோடு புதுமணத் தம்பதிகளுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்துகின்றனர். இந்தியாவில் குறிப்பிட்ட சமூகங்களில் தியானம் யோகா மூலம் கருவறையில் பிள்ளையின் அறிவு மற்றும் மொழித்திறனை வளர்ப்பதற்கும் சுகப்பிரசவத்துக்கும் பேறுகால பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடக்கின்றன.
எல்லா சித்தாந்தங்களையும் பயிற்சிகளையும் விட நுட்பமான பேறுகால பயிற்சிப் பாடங்களை கொண்ட முஸ்லிம் சமுகத்தின் நிலை என்ன ? சமூகத்தில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெரும்பாலும் அரசியல் மயமாக இருப்பதால், சிந்தனை வளமுள்ள பல இளைஞர்கள் சமூகத்தின் எதார்த்த நிலையை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதால் உம்மத்தில் குறைமாத பிரசவங்களும் சிசேரியன்களும் அமோகமாக நடைபெறுகிறது. மருத்துவர்கள் ஏளனமாக பார்த்து நகைக்கும் அளவிற்கு மூமினான பெண்களின் அறியாமை வெளிப்படுகிறது.
சந்ததிகளை உருவாக்கும் அடிப்படையான கருத்தில் உம்மத்திற்கு ஒரு புரிதலை கொண்டு வராமல் நாம் முன்னெடுக்கும் சமூகப்பணிகள் எப்படி வெற்றியடையும் என்பதை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ” வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சானாம்” என்று அறிவார்ந்த கிராம மக்களிடம் ஒரு சொல் இருக்கிறது. இன்றைய அதிகமான முஸ்லிம் குடும்பங்களில் இதை பார்க்கலாம்.
கல்வி குறித்த கருத்தியலில் நாம் இன்னும் நமது சொந்த அறிவில் நின்று சிந்திக்கத் துவங்கவில்லை. ஆடம் ஸ்மித் மெக்காலே காரல் மார்க்ஸ் காந்தி அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் கல்வி குறித்த கருத்தியலில் நின்று முஸ்லிம்களாகிய நாமும் சிந்திக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும்.மாற்றப்பட வேண்டும். இந்தியாவின் சமூக அரசியல் சூழல் காரணமாக மேலே குறிப்பிட்டுள்ள சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சிலவற்றோடு முஸ்லிம்களுக்கும் உடன்பாடு இருப்பதால் அந்தந்த அமைப்புகளோடும் ஆதரவாளர்களோடும் அரசியல் சமூகத் தளங்களில் கைகோர்த்து நிற்பது சரியான வழிமுறைதான். ஆனால் கல்வியும் கலாச்சாரமும் இதில் சேரவே சேராது.சேர்க்கவும் கூடாது.
முஸ்லிம் சமூகத்தின் கல்வித் துறையை கட்டமைப்பதில் ஆரம்பமாக செய்ய வேண்டியது இந்த பேறுகால பாடத்தை வடிவமைப்பது தான்.இது அரசின் வேலை அல்ல.இதற்கு சமூகம் தான் முழு பொறுப்பு. இது அவரவரின் தனிப்பட்ட விருப்பப் பாடமும் அல்ல.இது முஸ்லிம் சமூக கட்டமைப்புக்கான கட்டாயப் பாடம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் திருமணங்களில் இந்த பேறுகால பாடப் புத்தகங்கள் அதிகமாக விநியோகம் செய்யப்பட வேண்டும். புதுமணத் தம்பதிகளுக்கு இந்த பேறுகால பாடத்தை நடத்துவதற்கான திட்டங்கள் மஹல்லா நிர்வாகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் அதிகமாக பெற்றுக்கொள்வதை வெறுக்கும் மனநிலைக்கு பெண்களே வந்துவிட்ட இன்றைய சூழலில் இனியும் இதுபோன்ற அடிப்படையான துறைகளில் கவனம் செலுத்தாமல் வெறுமனே வாயிலேயே (முகநூலில்) வடை சுடுவதால் சமூகத்தில் எந்த மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படப் போவதில்லை.
உங்கள் மஹல்லாவில் இதற்கான முயற்சியை துவங்குங்கள்.இல்லையென்றால் துவங்குபவர்களுக்கு ஆதரவாக நில்லுங்கள்.
தொடரும்………
————————————————————–
மூன்றாவது வகுப்பில் நாம் கற்றுக்கொள்வது :
————————————————————-
1.இஸ்லாமிய கல்வியின் மூலாதாரங்கள் மூன்று.
2. பேறுகால பாடம் தான் பிள்ளைக்கான ஆரம்பக்கல்வி என்பது இஸ்லாமிய கல்விக் கொள்கை.