அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்
ஏறக்குறைய 50 மஹல்லாக்களில் இந்த வாழ்வுரிமைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன அந்தந்தப் பகுதி ஜமாஅத்துகளும் சமுதாய அமைப்புகளும் இணைந்து மிகுந்த முதிர்ச்சியோடும் பொறுப்புணர்வோடும் நடத்தி வருகின்றனர்.
உண்மையான இந்த உணர்வெழுச்சியின் அடுத்தப்பகுதி எப்படி அமைந்தால் எதிர்கால ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது குறித்து ஒருசில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
போராட்டங்கள் நடைபெறும் 50 மஹல்லாக்களில் கல்விப்பின்புலமும் பொருள்வளமும் மிக்க ஒரு 5 மஹல்லாக்களில் வருகின்ற கல்வியாண்டு முதல் மத்திய மாநில அரசுப் பணிகளுக்கு பயிற்சியளிக்கும் IAS அகாடமியை துவங்க வேண்டும்.
இது நமது வாழ்வுரிமை போராட்டத்தை அறிவார்ந்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.
மட்டுமல்ல இந்தியாவின் உயிராகவும் உணர்ச்சியாகவும் உலக அரங்கில் நாட்டிற்கு கண்ணியத்தையும் வழங்கி வரும் நமது அரசமைப்புச் சட்டம் இவர்களால் பலவீனப்பட்டுவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகவும் இருக்கும்.
1950 களில் துவங்கியிருக்க வேண்டிய இந்த அடிப்படையான வேலையை இனிமேலும் நாம் தள்ளிப்போடக்கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
உம்மத்தின் பிள்ளைகளோடு மஹல்லாவை சுற்றி வாழும் அனைத்து சமுதாய பிள்ளைகளிலும் தகுதிமிக்கவர்களை தேர்வு செய்து உம்மத்தின் பராமரிப்பில் பயிற்றுவிக்க வேண்டும்.
BC,MBC,OBC,SC,ST என எல்லா பிரிவுகளுக்கும் இந்த அகாடமியின் மாணவர்களே செல்லும் வகையில் உயர்வான தரத்தில் சரியான திட்டமிடுதலோடு துவங்க வேண்டும்.
இந்த ஆண்டே துவங்கினால் இன்ஷா அல்லாஹ் அடுத்துவரும் 3 – 5 ஆண்டுகளில் பலனளிக்க துவங்கிவிடும்.அடுத்த 20 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளின் கொள்கை முடிவெடுப்பதிலும் அதை நடைமுறைப் படுத்துவதிலும் மக்களுக்கு நீதி வழங்குவதிலும் நாம் உருவாக்கும் இந்தப் பிள்ளைகள் பெரும் பங்கு வகிப்பார்கள். தவறானவர்கள் கையில் நாடு சிக்காமல் இருப்பதற்கு இது ஒரு மிக முக்கிய முன்னெடுப்பாக இருக்கும்.
இந்த IAS அகாடமியை துவங்குவதற்கு எந்த ஜமாஅத் முன்வந்தாலும் அதற்கான அனைத்து வழிகாட்டுதலையும் பயிற்சியையும் எப்போதும் அளிக்க தயாராக உள்ளோம்