Admin
November 18, 2020
உம்மத்தில் பொருளாதார மீட்புப் பணிகளை திட்டமிட வேண்டும்
ஊரடங்கு விரைவாக முடிந்துவிடும் என்றாலும் அதன் பாதிப்புகள் அளவிட முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்பது மிக முக்கியமானது.
அதிக எண்ணிக்கையிலான நடுத்தர மக்கள் ஏழ்மைக்கு தள்ளப்படுவார்கள். கணிசமான அளவு ஏழை மக்கள் தினக்கூலிகள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்.வியாபாரம் மற்றும் சிறிய அளவில் தொழில் செய்வோரில் பெருவாரியானவர்கள் வட்டியில் விழும் சூழல் உருவாகி வருகிறது. அடுத்து ஒரு பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பஞ்சமும் கொள்ளை நோய்களும் பீடித்த காலத்தில் கூட உழைப்பும் வியாபாரமும் தடை செய்யப்படவில்லை என்பதை வரலாற்றில் படிக்கின்றோம்.
இன்றைய ஆபத்தை சமூக ஆர்வலர்கள் சரியாக கணித்து உணர்ந்து கொள்ள வேண்டும். அரசின் முயற்சிகளோடு சமூக அக்கறையுள்ளவர்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே பலரின் வாழ்வு மீட்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மகத்தான மாற்றத்திற்கு முன்பு ஏற்படும் ஒரு பின்னடைவாகத்தான் இதை கருத வேண்டும்.
பொருளாதார இழப்புகளை சந்தித்தவர்களுக்கு உளவியல் (ஆன்மிக) ரீதியான பயிற்சியும் மீண்டு எழுவதற்கான வழிகாட்டுதலும் கூடவே பொருளாதார உதவிகளையும் அந்தந்தப் பகுதியின் ஜமாத்தார்கள் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைத்துத் தர வேண்டும்..
இது ஒரு அசாதாரண காரியம்.. ஆனால் செய்துதான் ஆக வேண்டும்.
உம்மத்திற்கான மார்க்க வழிகாட்டுதலோடு நெருக்கடி கால உலகத் தேவைகளையும் ஜமாத் நிர்வாகத்தால் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டும் தான் மக்கள் பளளிவாசல் நிர்வாகத்தை சார்ந்து வாழ விரும்புவார்கள்.
சோதனையான இந்த காலத்தை கடப்பதில் குடும்பத்து பெண்களின் பங்கு மிக முக்கியமானது. இழந்ததை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆண்களோடு பெண்கள் பொறுமையுடனும் அனுசரணையோடும் கைகோர்த்து நடந்தால் குறுகிய காலத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.
உழைத்து களைத்து, இன்றைய சூழ்நிலையால் இழப்புகளை சந்தித்து நிற்கும் ஆணுக்கு அவனது மனைவி ஆதரவான வார்த்தைகளால் நம்பிக்கை யூட்டினால் அவன் பெறப்போகும் அனைத்து வெற்றிகளுக்கும் அதான் அடித்தளமாக அமையும்.
இது குறித்து இன்னும் பேசுவோம்….