Admin
November 18, 2020
சிட்டுக் குருவிகளை கொண்டு படைத்தவன் பாடம் நடத்துகிறான்.
17 ஆம் நூற்றாண்டு துவங்கி கடந்த 400 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மலேரியா நோயாளிகளை காப்பாற்றிய குயினின் (quinine) என்ற மருந்து சின்கோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்பட்டது.
குயினின் மருந்தின் இரசாயன வடிவம் தான் இன்றைய உலக நாடுகள் Covid – 19 வைரஸை எதிர்கொள்வதற்கு அதிவேகமாக உற்பத்தி செய்யும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) என்ற மருந்து. 1970 இல் தான் இதை முழு இரசாயன மருந்தாக மாற்றி உருவாக்கினார்கள்.
1860 இல் நீலகிரி மாவட்டத்தில் மலேரியா நோய் வேகமாகப் பரவியது. இதனால் ஏராளமானோர் உயிரிழக்கவும் செய்தனர். சின்கோனா மரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் குயினின் மருந்து, மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் விளைந்த சின்கோனா என்ற தாவரத்தை தமிழகத்தின் ஊட்டியில் உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.
1864 இல் மலேரியா காய்ச்சல் உலகையே சூறையாடிய காலனி ஆதிக்க காலத்திலும், இரண்டு உலகப்போர் காலத்திலும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இந்த சின்கோனா மரச்செடிகளுக்காக கடும் சண்டைகள் நடைபெற்றுள்ளன.
மலேரியா வைரஸை எதிர்க்கும் குயினின் என்ற இந்த மருந்து சின்கோனா மரத்தில் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான மரங்களில் செடிகளில் அந்தந்த நாடுகளுக்கேற்ப மக்களின் தேவைகளுக்கேற்ப யாரும் பயிரிடாமலேயே முளைத்திருக்கும் என்பது இறைவனின் ஏற்பாடு. எல்லா இயற்கை ஆர்வலர்களின் கருத்தும் அது தான்.
மாமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ; மரங்களில் காய்களில் பட்டைகளில் வேர்களில் மனிதனுக்கு ஏற்படும் பல நோய்முடிச்சுகளை அவிழ்க்கும் ரகசியத்தை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான் அதை ஆய்ந்தறிவது இஸ்லாமிய கல்வியில் மூன்றில் ஒரு பாகம் என்று கூறினார்கள்.
ஆய்வுகளின் மூலம் மட்டுமே இவற்றை மனிதர்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் படைக்கும் போதே அல்லாஹ் கற்றுக் கொடுத்துள்ளான்.
1998 இல் கல்கத்தாவில் மலேரியா காய்ச்சல் கடுமையாக பரவியது. பறவையியல் ஆய்வாளர் முனைவர் சுஷிம் சென்குப்தாவும் அவரது குழுவினரும் சிட்டுக்குருவிகளை ஆய்வு செய்தனர்.
பொதுவாக வேப்ப மர குச்சிகளில் கூடு கட்டும் சிட்டுக் குருவிகள் கல்கத்தாவில் மலேரியா காய்ச்சல் பரவிய காலத்தில் அவை Paradise Flower Tree (Caesalpina Pulcherrima) (செம்மயிற்கொன்றை) என்ற மரத்தின் நரம்புகளை வைத்து கூடு கட்டுவதையும் அதன் இலைகளை உண்டு மலேரியா தாக்குதலிலிருந்து தங்களை காத்துக் கொண்டதையும் கண்டறிந்தார்.
மேற்கண்ட தகவல்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் என்னவென்றால் இன்றைக்கு நமது கல்விமுறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிள்ளைகள் உயிரியல் பாடத்தை எதற்காக ஏன் படிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமலேயே படிக்கின்றனர்.
சிட்டுக் குருவிகளுக்கு மலேரியா மருந்தை கற்றுக்கொடுத்தது யார்…..? மனிதர்களுக்கு நெருக்கமாக வாழும் பறவையாக சிட்டுக் குருவிகளை ஏன் படைத்துள்ளான்….?
இந்த பூமியில் நம்மோடு வாழும் சக உயிரினங்களில் நமக்கான பாடங்களும் வழிகாட்டுதலும் என்ன இருக்கிறது என்பதை இறைவனது கருத்தில் நின்று புரிந்து கொள்ளும் மத்திய காலத்து உயிரியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் வழக்கம் நம்மிடம் இன்று அறவே இல்லாமல் போய்விட்டது.
————————————–
Source :
The Hidden Powers of Animals: Uncovering the Secrets of Nature – Dr. Karl P. N. Shuker.