Admin
November 19, 2020
இப்படி பேசுபவர்களை நாம் எப்போது உருவாக்கப் போகிறோம்.
” மத்திய மாநில அரசுகளே…..
அணைத்து சமய ஆன்மிகத் தலைவர்களே…..
இறைநம்பிக்கை கொண்ட இந்திய மக்களே…..
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்டு நம்பிக்கை இழந்துவிடாதீர்.
இது இறைவனின் சோதனை.
மனிதர்களின் குணம் நற்பண்புகளின் எல்லையைத் தாண்டுகிறபோது, மனிதனின் வாழ்க்கை முறை இறைவனின் படைப்பு விதிகளை மீறுகின்றபோது, இந்த பூமியில் இறைவன் படைத்த இயற்கை அமைப்புகளை மனிதன் சீரழிகின்றபோது,இறைவன் புறத்திலிருந்து சோதனைகள் நிச்சயமாக வரும் என்பதை இறைவேதம் அல்குர்ஆன் கூறுகிறது.
“வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன் (போன்ற) பூச்சிகள், தவளைகள், இரத்தம் என்பனவற்றைத் தெளிவான அத்தாட்சிகளாக அவர்கள் மீது நாம் அனுப்பினோம். பின்னரும் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் கூட்டத்தினராக இருந்தனர். ” (7:133)
நாம் நமது தவறுகளை திருத்திக் கொள்வோம்.நமது வாழ்வை புதுப்பித்துக் கொள்வோம். துன்பங்கள் தொடர்ச்சியாக வருகிறது என்பதற்காக இறைவனது கருணையின் மீது எப்போதும் எந்த நிலையிலும் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.அல்லாஹ் மிக்க கருணையாளன் (ரஹ்மான்) அவன் இரட்சிக்க கூடியவன் (முஹைமீன்). பழிவாங்குபவனும் (முன்தகிம்) இரக்கமுடையவனும் (ரவூஃப்)அவனே.
மேலும் ஒவ்வொரு துன்பத்திலும் இன்பம் இருக்கிறது என்பது இறைவனது வாக்கு.அது ஒருபோதும் பொய்க்காது.
வெள்ளம் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை பழிவாங்குகிறது.பயிர்களை பாழாக்குகிறது. இறுதியில் வெள்ளத்தின் ஒருபகுதி நிலத்தடி நீராக பூமியில் தங்கி மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் உயிர்நீராக மாறுகிறது.
அதேபோல வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி பல நாட்கள் அவனை முடக்கிப்போடுகிறது. விதியின் அடிப்படையில் சிலரின் உயிர்போகிறது.ஆனால் மீண்டவர்கள் உடலில் திடமான நோய் எதிர்ப்புத்திறன் உண்டாகிறது.அது பலவிதமான நோய்களை எதிர்த்து போரிட்டு அவர்களை காப்பாற்றுகிறது.
ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் மனித வாழ்வு ஏற்றம் கண்டுள்ளதை உலக வரலாறு நமக்கு காட்டுகிறது.
ஆகையால் வெட்டுக்கிளிகள் படையெடுப்பின் பாதிப்புகளில் இருந்து இந்திய சமூகம் மீள முதலில் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம். அதே நேரம் வெட்டுக்கிளிகளில் இறைவன் மறைத்து வைத்துள்ள மனிதர்களுக்கான நன்மைகளை மிக விரைவாக கண்டுபிடித்து உலகிற்கு அறிவிக்கின்றோம்.
உயிரியல்(Biology),பூச்சியியல்(Entomology), புழுக்கள் (Nematology), நிலவியல்(Geology), மண் அறிவியல்(Soil Science), இயற்கை வேளாண்மை (Organic Farming), உயிரி தொழில்நுட்பம் (Bio Technology), விலங்கியல் (Zoology),தாவரவியல்(Botany),மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் (Genetics and Plant Breeding), நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்(Nano Science and Technology), உணவு அறிவியல்(Food Science), போன்ற இயற்கை அறிவியல் சார்ந்த துறைகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ள பல நூறு ஆராய்ச்சியாளர்கள் அனுபவமிக்க அறிஞர்கள் எங்கள் சமூகத்தில் உள்ளனர்.மேலும் இவை அனைத்தையும் இறைவன் எதற்காக படைத்துள்ளான் என்ற படைப்பு தத்துவத்தையும் சேர்த்துப் பயின்றுள்ள அறிஞர்கள் தான் இவர்கள் என்பதும் எங்களின் தனிச்சிறப்பு. “
…….இப்படி……….இந்திய சமூகத்திற்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தி உரக்கப் பேசும் தகுதி வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளனரா என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இவையெல்லாம் வெறும் வேலை வாய்ப்புகளை பெறும் படிப்புகள் அல்ல. அல்லாஹ்வுடைய தீனை அரியனை ஏற்றும் நவீனமான அறிவாயுதங்கள் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்.
காலம் கைமீறி போய்விட வில்லை.
உங்கள் வீடுகளில் உயிரியல் பிரிவில் பயின்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் இருந்தால் அல்லாஹ்வின் அருளுக்குரிய இந்தப் பாதையில் அவர்களை உருவாக்கிட முன்வாருங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் அதன் நற்பலன்களை இந்த நாடும் முஸ்லிம் சமூகமும் அறுவடை செய்யத் துவங்கும் என்பது நிச்சயம். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு மகத்தான எதிர்காலத்தை அது அமைத்துத் தரும் என்பது அதைவிட நிச்சயம்.