
திருத்தணியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பள்ளிப்பட்டு நகரி வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கமிட்டி மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருத்தணியில் நடைபெற்றது.
இஸ்லாமிய கல்வி மரபில் ஆழ்ந்த ஞானமுடைய சென்னை பாலவாக்கம் இமாம் மௌலவி A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்களும் நானும் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தோம்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்ட முஸ்லிம் சமூகத்துக்கும், ஆந்திர எல்லையில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் சமூகப் பொருளாதார வேறுபாடுகள் கண்டு என்னளவில் சமூகச் சுமைகளும் பொறுப்புகளும் கூடியதாக உணர்தேன்.
இஸ்லாத்தின் கண்ணியமான அடையாளங்களும் பண்பாட்டுச் சிறப்புகளும் மிக உயர்வாக இருக்கிறது. ஆனால் நவீனக் கல்வி மீதான ஆர்வமும் வழிகாட்டுதலும் குறைவாக இருக்கிறது.இதனால் அங்கே ஏழ்மையும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளும் அதிகமாக இருக்கிறது.
மிகப்பெரிய அளவிலான கல்வி விழிப்புணர்வு மற்றும் உதவிப்பணிகள் நீண்ட காலத்துக்கு மேற்கொள்ள வேண்டியத் தேவையிருக்கிறது.
முஸ்லிம்களின் நிலையையும் பெருகிவரும் சமூக அரசியல் நெருக்கடிகளையும் துல்லியமாக உணர்ந்த திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத் கமிட்டியும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் சில தன்னார்வ ஊழியர்களும் தொடர்ந்து சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆன்மிகத்தையும் நவீனக் கல்வியையும் தவிர்த்து வெறேதைக் கொண்டும் முஸ்லிம் உம்மத்தை உயர்த்திவிடவோ அதிகாரப்படுத்திவிடவோ முடியாது என்பதில் தெள்ளத்தெளிவாக இருக்கின்றனர்.