அபுதாலிப் , முத்திம் இப்னு அதி போன்றவர்களை அடையாளம் கண்டு கண்ணியப்படுத்துவது நபிவழி
அபுதாலிப்
முத்திம் இப்னு அதி
போன்றவர்களை அடையாளம்
கண்டு கண்ணியப்படுத்துவது
நபிவழி.
அபுதாலிப்
———
மக்கா நகரத்தின் பெருந்தலைவர். குறைஷிகளில் பனூ ஹாஷிம் பனூ அல்முத்தலிப் ஆகிய மதிப்புமிக்க குடும்பத்தாரின் மூத்த தலைவர்.
தனது தம்பி மகன் முஹம்மது இப்னு அப்துல்லா (ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு அரணாக நின்றவர்.அவரின் இறுதிமூச்சு வரையிலும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை தனது கண்காணிப்பு வட்டத்துக்குள் வைத்து காத்து நின்ற பலதெய்வ வழிபாட்டாளர்.
குறைஷிகளால் ஊர்விலக்கம் செய்யப்பட்டபோது பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கும் உறுதுணையாக நிற்பதற்கு, குலதெய்வ வழிபாடு செய்துவந்த தனது ஒட்டுமொத்த குடும்பப் படையையும் ஒன்று திரட்டிய சமூக அரசியல் இராஜதந்திரி (Socio Political Diplomat) அபுதாலிப்.
ஊர்விலக்கத்தின் காரணமாக பெண்கள் குழந்தைகள் பசியினால் இலை தழைகளை உண்டபோதும் கூட பெருமானாருக்கும் ஏகத்துவத்துக்கும் பலதெய்வ வழிபாடுடைய அபுதாலிபின் குடும்பத்தினர் பேராதரவாக நின்றனர்.
முத்திம் இப்னு அதி
—————–
நபித்துவத்தின் 9 ஆம் ஆண்டு. பெருமானார் (ஸல்) அவர்களை அரணாக காத்து நின்ற அபுதாலிப் மறைந்தார். கண் இமை போன்று காத்து நின்ற மனைவி கதீஜா மறைந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் மீது தாக்குதல் அதிகமானது.
அடைக்கலம் தேடி அருகிலுள்ள தாயிஃப்க்கு ஓடினார்கள். அங்கும் கல்லால் அடித்து விரட்டப்பட்டார்கள். காலிலும் தலையிலும் இரத்தம் சொட்ட எங்கு செல்வதென்று தெரியாமல் யாரிடம் ஆதரவு கேட்பதென்று தெரியாமல் மீண்டும் ஹீரா குகைக்கே திரும்பினார்கள்.
தன்மானம் பார்க்காமல் மக்காவிலுள்ள சில குறைஷி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வளர்ப்பு மகன் ஜைத் இப்னு ஹாரிதா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். பலரும் மறுத்துவிட்டனர்.கடைசியாக ஒருவர் அடைக்கலம் தர முன்வந்தார்.
அவர் தான் முத்திம் இப்னு அதி.
குறைஷிகளின் பனூ அப்து மனாஃப் குடும்பத்தைச் சேர்ந்தவர்.மக்காவின் மதிப்புமிக்கத் தலைவர். பெருமானார் (ஸல்) அவர்களின் அங்காளி பங்காளி. (தாய் வழி தந்தை வழி உறவு).
ஊர்விலக்கம் செய்யப்பட காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் அபுதாலிப் குடும்பத்தினரும் துன்பப்படுவதை பார்த்து ஊர்விலக்கத்தை அதிகாரப்பூர்வமாக அகற்றிட குறைஷிகளின் நாடாளுமன்றம் தாருந்நத்வா வில் வியூகத்துடன் அணுகிய அரசியல் ஞானி இவர்.
இஸ்லாத்தை ஏற்காமல் கடும் விமர்சனங்களும் செய்து கொண்டிருந்தவர். ஆனால் அடைக்கலம் வேண்டிய பெருமானார் (ஸல்) அவர்களின் கோரிக்கையை ஏற்றார். அபுதாலிப் கதீஜா அம்மையாருக்குப் பிறகு பெருமானாரை மக்காவில் வைத்து பாதுகாத்தவர் இவர். வயதுமூப்பு காரணமாக சில காலங்களில் மரணித்துவிடுகிறார்.
பத்ர் போர்க்களம்.
மக்காவில் தான் நிர்கதியாக நின்ற நேரத்தில் தனக்கு அடைக்கலம் அளித்த முத்திம் இப்னு அதி அவர்களின் புதல்வரும் சகோதரரும் குறைஷி படையின் முதல் வரிசையில் வாளேந்தி நிற்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கண்டார்கள்.
அதிர்ச்சியடைந்தார்கள்.என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களுடன் மட்டும் போரிட வேண்டாம் என்று முஸ்லிம்களிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதை அவர்கள் இருவரும் ஏற்காமல் முஸ்லிம்களுடன் போரிட்டனர்.
போரில் முத்திம் இப்னு அதி அவர்களின் சகோதரர் கொல்லப்பட்டார். மகன் சுபைர் இபின் அதி கைதியாக பிடிக்கப்பட்டு மதீனத்து பள்ளிவாசலின் வாயிலிருந்த ஈச்சைமரத்தில் கட்டப்பட்டிருந்தார்.மஃக்ரிப் தொழுதுவிட்டு வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் சுபைரை பார்த்து இப்படி சொன்னார்கள்..
” குறைஷிகளில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உன்னையும் சேர்த்து 70 பேர் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் செல்வந்தர்களுக்கு பிணையத் தொகையும் கல்வியாளர்களுக்கு கற்பித்தலையும் விடுதலைக்கான நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் உன் தந்தை உயிருடன் இருந்து குறைஷிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள் என்று ஒருவார்த்தை கூறினால் எந்த மறுப்பும் இல்லாமல் அனைவரையும் விடுதலை செய்துவிடுவேன் ” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குலதெய்வ வழிபாடு செய்பவராகவும், இஸ்லாத்தையும் பெருமானாரையும் கடுமையாக விமர்சனங்கள் செய்பவராகவும் இருந்தும் கூட மிக நெருக்கடியான காலத்தில் தனக்கு அடைக்கலம் அளித்த முத்திம் இப்னு அதி அவர்களுக்கு செய்நன்றி மறவாது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய நன்றியுணர்ச்சி இது.
அபுதாலிப்,முத்திம் இப்னு அதி, துவங்கி இன்றுவரை 1440 ஆண்டுகளில் உலகில் இந்தியாவில் தமிழகத்தில் எண்ணிலடங்கா மாற்று மத தலைவர்கள் அரசர்கள் அறிஞர்கள் மதகுருமார்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் நிலச்சுவான்தார்கள் திராவிட அம்பேத்கரிய பொதுவுடைமை தமிழ்த்தேசிய இயக்கத் தலைவர்கள் அனைத்து சாதி வழி சமுதாயத் தலைவர்கள் கிராம பெரியவர்கள் உள்ளிடோர், எண்ணிக்கையில் குறைவாக வாழும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பாதுகாப்பாக பேராதரவாக நின்றுள்ளனர். நிற்கின்றனர். நிற்பார்கள்.
இது அல்லாஹ்வின் ஏற்பாடு.
இவர்களில் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சில காரணங்களுக்காக சில நேரங்களில் விமர்சனம் செய்பவர்களாக கூட இருக்கலாம்.ஆங்காங்கே சிறு சிறு மோதல்கள் கூட நடைபெற்றிருக்கலாம்.தேர்தல் அரசியலில் அணிமாறி கூட பயணித்திருக்கலாம். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்வதில் இவர்கள் முன்வரிசையில் இருப்பதால் அந்த விமர்சனங்களை மோதல்களை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லும் பண்பாட்டையும் பக்குவத்தையும் பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தான நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் பொதுவெளிகளிலும், வெளியே தெரியாமல் மூலை முடுக்குகளிலும் வாழும் இந்த அபுதாலிபுகளை முத்திம் இப்னு அதி போன்றோரை அடையாளம் கண்டு கண்ணியப்படுத்துவதும் தோழமையோடு நடந்து கொள்வதும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை என்பது பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்துள்ள வாழ்வியல் பாடம்.
– CMN SALEEM