படிப்பினை பெறவேண்டிய
பாஜக அரசு கொண்டுவந்துள்ள வஃக்பு சட்டத்திருத்த மசோதா – 2024 இல் திருத்தங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டது.விரைவில் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் வெளிப்படையான விவாதப் பொருளாகவும், மறைமுகமாக நடைமுறைப் படுத்தப்பட்டும் வந்த பொது சிவில் சட்டம் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமாகியுள்ளது.
உணர்ச்சி வசப்படாமல் மக்களை உணர்ச்சி வசப்படுத்தாமல் தொலைநோக்குத் திட்டத்தையும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் யார் முன்னெடுத்தாலும் அது நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த இரண்டு விரும்பத்தகாத அடைவுகளும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
இந்த இரண்டு செய்திகளும் சமூக அக்கறையுடைய முஸ்லிம்களுக்கு ஒருவிதமான சங்கடத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எந்த சங்கடத்துக்கு நெருக்கடிகளுக்கும் உள்ளாக வேண்டியத் தேவையில்லை.
இதுபோன்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களுக்கு நிலையான அறிவுப்பூர்வமான தீர்வுகளை ஆலோசித்து அதை நோக்கி நாம் நகர்வதும் உம்மத்தின் இளைஞர்களை நகர்த்துவதும் நமது இலக்காக மாறினால் வெகுவிரைவில் மிக அழகிய அமைதியான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
ஷரீஅத் மற்றும் சட்டக்கல்வி இந்த இரண்டு துறைகளிலும் கல்வியியல் புலமையுடையவர்களால் (Academic Excellence) மட்டும் தான் இந்த சிக்கல்களின் ஆழத்தையும் விசாலத்தையும் புரிந்து கொள்ளமுடியும்.
அப்படிப்பட்ட வல்லுனர்களின் நியாமான கோரிக்கைகள் வாதங்கள் ராஜ்ய ரீதியான லாபி மற்றும் சட்டப் போராட்டங்களால் மட்டும் தான் இதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.மிக குறைவாக உள்ள நமது மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளங்களை பயன்படுத்தி நம்மை ஆற்றல்படுத்திக் கொள்ள முடியும்.அதன் மூலம் நிலையானத் தீர்வுகளையும் ஏற்படுத்த முடியும்.
பன்முகத் தன்மையுடைய ஜனநாயக நாட்டில் சட்ட சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வழிமுறை என்று நமது அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவும் இதுதான் தகுதியுடைய பாடமாகவும் இருக்கும்.
ஒவ்வொரு மதரஸாவிலும் சமுதாய அமைப்பிலும் முஹல்லாவிலும் அதுபோன்ற வல்லுநர்களை உருவாக்குவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை